திங்கள், 8 மார்ச், 2021

தமிழ்நாட்டின் அதிக விஷமுள்ள பாம்புகளின் வகைகளும் அதன் சிறு விவரங்களும் -Types of highly venomous snakes in Tamil Nadu and its small details.

பாம்புகள்:
உலகளவில் 2,968 வகையான பாம்புகள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள பாம்பு வகையில் நான்கு மட்டுமே விஷமுள்ளது. மற்றவை விஷமற்றது. அவைகள் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன்.
நல்லபாம்பு:
பழுப்பு, மஞ்சள் அல்லது கறுப்பு நிறங்களை கொண்ட நல்ல பாம்பு படம் எடுக்கும் தன்மை கொண்டது. ஒரு மீட்டர் நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 2.2 மீட்டர் நீளம் வரை வளரும். இவைகள் எலி வலை மற்றும் கரையான் புற்றுகளில் வாழும். நல்ல பாம்பின் விஷம் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் தாக்கி மரணம் விளைவிக்கக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் இவைகள் பரவலாக காணப்படுகின்றன.
கட்டுவிரியன்:
இரவு நேரங்களில் மட்டுமே இரை தேடி செல்லும் இந்த வகை பாம்பு மேல்புறம் பளபளக்கும் கறுமை நிறத்துடன் வால் வரை தொடரும் மெல்லிய வெள்ளைக் குறுக்கு கோடுகளும் காணப்படும். பாம்பின் கீழ்புறம் வெள்ளை அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக காணப்படும். இதன் நாக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இது 1.75 மீட்டர் நீளம் வரை வளரும். கரையான் புற்று, எலி வலை,கற்குவியலில் இவைகள் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழும் பாம்புகளுக்கு மட்டுமே வீரியம் அதிகம். இந்த பாம்பின் விஷம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. சென்னை மற்றும் புறநகரில் குறைந்த அளவே காணப்படுகிறது.
கண்ணாடி விரியன்:
இரவு நேரத்தில் காணப்படக்கூடிய இந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருக்கும். கண்ணின் பாவை நெடு நீள வடிவத்திலிருக்கும். பழுப்பு அல்லது மஞ்சளம் கலந்த பழுப்பு நிறத்தில் உள்ள இந்த பாம்புகளின் மேல்புறம் பழுப்பு அல்லது மஞ்சள் நிற வட்ட வடிவம் காணப்படும். இது1.80 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. முட்புதர் மற்றும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மிக நீளமான விஷப் பற்களை கொண்ட இந்த பாம்பிம் விஷம் இதயத் திசுக்களையும், ரத்த ஓட்ட அமைப்பினையும் தாக்கி மரணம் விளைவிக்க கூடியது. இந்த வகை பாம்பும் சென்னை புறநகரில் மிகக்குறைந்த அளவே காணப்படுகின்றன.
சுருட்டை விரியன்:
இந்த பாம்பின் கண்கள் மிகப்பெரியதாக காணப்படும். வெளிர் மற்றும் அடர் பழுப்பு செந்நிறம், சாம்பல் அல்லது மணல் நிறத்துடன் உடலின் மேற்புறத்தில் வளைவு வடிவங்களை கொண்டு காணப்படும். இதன் தலையின் மேற்புறம் அம்பு வடிவம் காணப்படும். 50 செ.மீ., நீளத்தில் பருவமடையும் இந்த பாம்பு 80 செ.மீ., நீளம் வரை வளரக் கூடியது. வறண்ட பரந்த நிலப்பரப்புகள் மற்றும் அதிக மழை பெய்யும் மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். பகல் நேரத்தில் இந்த பாம்புகள் மரப்பட்டைகள்,கற்களுக்கு இடையிலும் கற்றாழை போன்ற செடிகள் அடியிலும் காணப்படும். இந்த பாம்பின் விஷம் ரத்த மண்டலத்தை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தென்சென்னை கடற்கரை பகுதிகளில் இந்த வகை பாம்புகள் ஓரளவு காணப்படுகின்றன.
விஷமற்ற பாம்புகள்:
சாரைப்பாம்பு, நீர்சாரை, மலைப்பாம்பு வகைகள், வெள்ளிக்கோல் வரையன், பச்சை பாம்பு, கொம்பேறி மூக்கன்,மண்ணுளி பாம்பு, பவழப்பாம்பு, அழகு பாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான்குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு, சிறு பாம்பு ஆகியவை விஷமற்ற பாம்புகளாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

motivations quotes by apj abdul kalam